இளைஞருக்கு மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த இளம்பெண்.. டேட்டிங் ஆப்பால் வந்த ஆப்பு!

 
Dating app

அரியானாவில் டேட்டிங் ஆப் மூலம் இளைஞரை தொடர்பு கொண்ட இளம்பெண் அவரிடமிருந்து போன், தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் குப்தா. இவர் ஆன்லைன் டேட்டிங் ஆப் ஒன்றின் மூலம் சாட்டிங்கில் ஈடுபட்டபோது இளம்பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார். அதில், சாக்சி என்ற பெயர் கொண்ட இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, பல நாட்களாக சாட்டிங் நீடித்து உள்ளது. சாக்சி, தன்னுடைய சொந்த ஊர் டெல்லி என்றும், குருகிராமில் உறவினர் வீட்டில் வசித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.  

இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி இரவு 10 மணியளவில் ரோகித்தை தொடர்பு கொண்டு பேசிய சாக்சி, நேரில் சந்திக்க வேண்டும் என்றும், தன்னை அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி, சாக்சியை பைக்கில் அழைத்து கொண்டு செல்லும் வழியில், ரோகித் அருகே உள்ள கடையில் மதுபானம் வாங்கியுள்ளார்.  

dating

பின்பு இருவரும் ரோகித்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, மதுபானத்தில் கலக்க பனிக்கட்டி (ஐஸ்) வேண்டும். அதனை எடுத்து வா என சாக்சி கூறியுள்ளார். இதனால், ரோகித் சமையலறைக்கு சென்று உள்ளார். அவர் சென்றபோது சாக்சி, மதுபானத்தில் மயக்க மருந்து கலந்து வைத்து விட்டார். இதை அறியாத ரோகித் திரும்பி வந்து மதுபானம் குடித்துள்ளார். பின்னர் மயங்கி போயுள்ளார். 

அடுத்த நாள் காலையில் ரோகித் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கிறார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் நேற்று இரவில் இருந்த சாக்சியை காணவில்லை. மேலும், ரோகித்தின் தங்க சங்கிலி, ஐபோன் 14 புரோ, ரூ.10 ஆயிரம் , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளும் காணாமல் போயிருந்தன.

Police

அந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் உதவியுடன் ரூ.1.78 லட்சம் பணமும் எடுக்கப்பட்டு உள்ளது என போலீசில் ரோகித் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web