நீர்வீழ்ச்சிக்குள் தவறி விழுந்த இளைஞர்.. செல்ஃபி மோகத்தால் விபரீதம்.. மீட்புப் பணியை பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்!!

 
Ajantha Cave

மகாராஷ்டிராவில் செல்பி எடுக்கும்போது 70 அடி நீர்வீழ்ச்சிக்குள் இளைஞர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ வாங்குவதற்காக இன்றைய இளைஞர்கள் செய்யும் செயல்கள் வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் இருக்கின்றன. ‘லைக்ஸ்’ எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்து விட்டாலே தன்னைத் தானே ‘செலிபிரிட்டி’ ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்ளும் இளைஞர்கள், அதன் பின் சமூக வலைதளமே கதி என ஆகி விடுகின்றனர். எப்போது பார்த்தாலும் செல்ஃபி, ரீல்ஸ் வீடியோ என தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டா பகுதியைச் சேர்ந்தவர் கோபால் சவான். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்று (ஜூலை 23) அஜந்தா குகையினைக் காண சுற்றுலா சென்றார். அதனின் அழகை ரசித்த பின்னர் அனைவரும் அஜந்தா மலை உச்சிற்கு சென்றனர்.

Ajanta

அதனருகில் சப்தகுந்தா நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி அஜந்தா மலை உச்சினையும், குகை வளாகத்தையும் பிரிக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி ஏறக்குறைய 70 அடி ஆழம் இருக்கும். அஜந்தா மலை உச்சிக்கு சென்ற அவர்கள் அங்கு செல்ஃபி எடுத்துள்ளனர்.

கோபால் சவானுக்கு செல்ஃபி மோகம் அதிகம் என்பதால் நிறைய போட்டோ எடுத்தார். இருப்பினும் அவருக்கு மனம் நிறைவு ஏற்படவில்லை, அதனால் மலை உச்சியின் விளிம்பிற்கே சென்றுவிட்டார். அங்கு சென்று செல்ஃபி எடுக்கும்போது கால் தவறி சப்தகுந்தா நீர்வீழ்ச்சிக்குள் விழுந்தார்.


கோபாலுக்கு நீச்சல் தெரிந்ததால் நீந்தி அருகில் இருந்த கல்லினைப் பிடித்துக் கொண்டார். உடனே அவரின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கோபால் பத்திரமாக கயிறு மூலம் காப்பாற்றப்பட்டார்.

மீட்புப் பணியைப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

From around the web