துப்பாக்கியால் வாலிபர் சுட்டுக் கொலை.. திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்!

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் மாடல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுலால். இவரது மகளின் திருமணம் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு அன்றிரவு திருமண விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜே ஆடல் பாடல் நிகழ்ச்சியில், உறவினர்கள் அனைவரும் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, திருமண விழாவில் கலந்து கொண்ட இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு, சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஒரு தரப்பை சேர்ந்த நபர், திடீரென எதிர்தரப்பினரை நோக்கி தன் கையிலிருந்த துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
அதில் படுகாயமடைந்த ஆமன் யாதவ் என்ற 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நவீன் (25), விகாஸ் (22) ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள அந்த நபரை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.