கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்.. மம்மி மம்மி என கதறிய மகள் ! பதறவைக்கும் வைரல் வீடியோ

மகாராஷ்டிராவில் கடற்கரையில் பாறையில் அமர்ந்து கணவருடன் சேர்ந்து வீடியோ எடுத்த பெண் ஒருவர் பெரிய அலையில் சிக்கி கடலுக்குள் விழுந்து உயிரை பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ராபலி பகுதியில் வசித்து வருபவர் முகேஷ் சோனார். இவர் தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி சோனார் (32). இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தன் குடும்பத்துடன் ஜூஹு சௌபாட்டிக்கு செல்ல முடிவு செய்திருந்தார்.
அப்போது அதிக அலை காரணமாக, கடற்கரைக்கு நுழைவது தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து, திட்டத்தை மாற்றிக்கொண்டு பாந்த்ரா நோக்கி சென்றுள்ளார். பின்னர் அங்கும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்தபோதும், முகேஷ் - ஜோதி தம்பதி கடற்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து வீடியோ, போட்டோ எடுத்துள்ளனர்.
அப்போது கடல் அலைகள் அவர்கள் அமர்ந்திருந்த பாறையில் வேகமாக மோதி மேலெழும்பியது. இருப்பினும் விபரீதத்தை உணராமல் ஜோதி தனது கணவர் முகேஷின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு போட்டோ, வீடியோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மிகப்பெரிய அலை வந்தது.
அப்போது பாறையில் அமர்ந்திருந்த முகேஷ், ஜோதி ஆகியோர் அந்த அலையில் சிக்கினர். பாறையில் அமர்ந்திருந்த இருவரும் கடலுக்குள் விழுந்தனர். இதை பார்த்த அவர்களின் மகள், “மம்மி.. மம்மி.. மம்மி..” என கதறினார். இதை பார்த்து ஷாக்கான பொதுமக்கள் கடலில் விழுந்த முகேசை விரைவாக மீட்டனர். ஆனால் ஜோதியை அவர்களால் மீட்க முடியவில்லை.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் மறுநாள் தான் ஜோதியின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே கடல் அலையை பொருட்படுத்தாமல் முகேஷ், ஜோதி ஜோடி வீடியோவுக்கு போஸ் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர்கள் இருவரையும் கடல் அலை அடித்து செல்லும்போது அவர்களது மகள், மம்மி.. மம்மி.. என கதறும் குரல் அந்த வீடியோவில் பதிவாகி பலரையும் கலங்கடித்து உள்ளது.