மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு.. ஒருவர் பலி.. கேரளாவில் பரபரப்பு!

 
Kerala

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கு இன்று காலை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் பங்கேற்று மத வழிபாடு செய்தனர். இந்த நிலையில், மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. 

Kerala

கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் 3 முறை குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

மேலும், மதவழிபாட்டு கூட்டரங்கில் நடந்த இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி விபத்தை தொடர்ந்த்து அரசு மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வெடி விபத்து நிகழ்ந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போலீஸ் உயர் அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் பி ராஜீவ் தெரிவித்துள்ளார்.


இந்த பிரார்த்தனை கூட்டத்தில் சுமார் 2000 பேர் கூடியிருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூன்றாவது நாளாக இந்த பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த அசம்பாவித சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web