தாறுமாறாக ஓடி பயணிகள் கூட்டத்தில் புகுந்த தனியார் பேருந்து.. பள்ளி மாணவி பரிதாப பலி!
கர்நாடகாவில் சாலையோரம் நின்ற பயணிகள் கூட்டத்திற்குள் தனியார் பேருந்து புகுந்த விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா சீதாபுரத்தை சேர்ந்தவர் மஞ்சு. இவரது மனைவி லதா. இந்த தம்பதியின் மகள் துளசி (14). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் துளசி மற்றும் அப்பகுதியை சேர்ந்த நிவேதிதா (14) ஆகியோர் உள்பட 5 மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்காக காலை 9 மணி அளவில் காவலுதுக்லாபுராவில் பேருந்துக்காக காத்திருந்தனர். அவர்களுடன் பொதுமக்கள் சிலரும் பேருந்துக்காக காத்து நின்றனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற மாணவிகள் உள்பட பயணிகள் மீது மோதியது. அத்துடன் அந்த பேருந்து அங்குள்ள டீக்கடை மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் பேருந்து மோதியதில் மாணவி துளசி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் துளசியின் அருகில் நின்ற நிவேதிதா உள்பட 4 மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்த மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தரிகெரே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் நிவேதிதா மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, விபத்துக்கு காரணமாக தனியார் பேருந்தை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கி ஆத்திரத்தை வெளிபடுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தரிகெரே போலீசார், பலியான துளசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்துஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.