தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.. புதுச்சேரியில் சென்னை பாய்ஸ் அட்ராசிட்டி.. மரண அடி.. அதிர்ச்சி வீடியோ

 
Puducherry

புதுச்சேரியில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களை மடக்கி பிடித்து அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினா். புதுவையின் பல்வேறு பகுதிகளை காரில் சென்று சுற்றிபார்த்த அவர்கள் மதுவும் குடித்துள்ளனர். மதுபோதையில் நேற்று பிற்பகலில் காரை எடுத்துக்கொண்டு பாண்டி மெரினா கடற்கரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேரு வீதிக்கு காரில் வந்துள்ளனர். போதையில் இருந்த அவர்கள் ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் காரை தாறுமாறாக ஓட்டினா். இதில் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டினார்கள். போதையில் இருந்த வாலிபர்கள் பொதுமக்கள் கையில் சிக்காமல் இருக்க காரை அண்ணாசாலை, காந்தி வீதி, முத்தியால்பேட்டை, சித்தானந்தாகோவில், இடையஞ்சாவடி ரோடு வழியாக காரை ஓட்டி சென்றனர். கார் தாறுமாறாக வருவதை கண்ட சாலையில் சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது அவர்களது கார் டயர் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

car

செல்லும் வழியில் அவர்கள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் அந்த காரை துரத்தி சென்றனர். இடையஞ்சாவடி ரோடு வழியாக விமான நிலையத்தின் பின்புறம் சென்றபோது அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த 5 வாலிபர்களையும் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர்களின் உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இருந்தபோதிலும் போதையில் இருந்த அவர்களால் தாக்குதலை தடுக்க முடியவில்லை. அவர்களை நையப்புடைத்த பொதுமக்கள் அவர்கள் ஓட்டி வந்த காரையும் அடித்து நொறுக்கினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபர்களை பொதுமக்களின் தாக்குதலில் இருந்து மீட்டனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த எபினேசர் (20), மேடவாக்கத்தை சேர்ந்த திலீப் (27), அசிக் (21), ஸ்ரீநாத் (25), சுனில் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களில் சுனில் காரை ஓட்டி வந்துள்ளார்.


அதிர்ஷ்டவசமாக அவர்கள் ஏற்படுத்திய விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கார் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. 2 சக்கர வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயம் காயங்களுடன் உயிர் தப்பினர். டயர் வெடித்த நிலையில் அவர்கள் 7 கி.மீ. தூரம் வரை காரை ஒட்டி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web