பட்டப்பகலில் 6 வயது குழந்தை கடத்தல்.. துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்ட கேரள முதல்வர்!!
கேரளாவில் 6 வயது சிறுமிபட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஹோண்டா அமெஸ் காரில் மர்ம கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் அபிகேல் சாரா என்ற சாரா ரெஜினா (6). இந்த நிலையில் சாரா ரெஜினா நேற்று முந்தினம் மாலையில் தனது அண்ணன் ஜோனாதனுடன் டியூசனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சாரா ரெஜினாவை காரில் இருந்தபடியே கடத்தி கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜோனாதன் கூறுகையில், “அந்த காரில் மூன்று ஆண்கள் ஒரு பெண் என நான்குபேர் இருந்தனர். ஒரு பேப்பரை கொடுத்து அதை அம்மாவிடம் கொடுக்கலாமா என தங்கையிடம் அந்த கும்பல் கேட்டது. தங்கை அந்த பேப்பரை வாங்கவில்லை. இதையடுத்து அவர்கள் தங்கையை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றினர். நான் அருகே சென்று டோரை பிடித்தபோது என்னை சிறிதுதூரம் இழுத்துச் சென்றதால் கீழே விழுந்தேன். அதன் பின்னர் கதவை அடைத்துக்கொண்டு தங்கையை காரில் கடத்திச் சென்றனர்” என சிறுவன் தெரிவித்திருந்தான்.
தங்கை கடத்தப்பட்ட உடன் வீட்டுக்கு வந்த சிறுவன், பெற்றோர் வேலைக்குச் சென்றதால், பாட்டியிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சிறுமி கடத்தப்பட்ட காரின் அடையாளம் தெரிந்துள்ளது. இதையடுத்து கேரளா முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் கேரளா மாநிலத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. ஆனாலும், சிறுமியை கடத்தியவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே கடத்தப்பட்ட சிறுமியின் தாயின் போனில் பேசிய பெண் ஒருவர், சிறுமியை விடுவிக்க வேண்டுமானால் 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் எனக் கூறியுள்ளார். அந்த எண்ணில் குழந்தையின் உறவினர்கள் திருப்பி அழைத்துள்ளனர். எதிர்முனையில் பேசியவர், குழந்தை பாதுகாப்பாக உள்ளது எனவும், 10 லட்சம் ரூபாய் தயார் செய்து வைய்யுங்கள். குழந்தைக்கு ஆபத்து நேரிடாமல் இருக்க வேண்டுமானால் போலீசாருக்கு தகவல் சொல்லக்கூடாது. நாளை காலை 10 மணிக்கு அழைக்கிறேன் என நேற்று கூறியுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை பரிசோதித்ததில் அது போலியானது எனவும், அது இருசக்கர வாகனத்தின் எண் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. தாய்க்கு போன் செய்த எண்ணை ஆய்வு செய்தபோது அது கொல்லம் பாரிப்பள்ளியில் ஒரு கடையின் எண் எனவும் தெரியவந்துள்ளது. குழந்தை குறித்த தகவல் தெரிந்தால் 112 என்ற எண்ணுக்கு அழைக்கும்படியும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பத்தனாபுரம் தொகுதி எம்.எல்.ஏ கணேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குற்றவாளிகள் நான் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தால் நான் அவர்களிடன் வேண்டுகோளாக கேட்கிறேன். குழந்தையை விட்டுவிடுங்கள். ஒரு குழந்தையை வைத்து விளையாடுவது நல்லதல்ல. அது அறிவுள்ள செயல் அல்ல, முட்டாள்தனமான செயலாகும். ஆறு வயது குழந்தை கிடைப்பதற்காக கேரள மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள். மக்களின் உணர்வை புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் குழந்தையை மறைத்து வைத்திருக்கும் இடம் தெரிந்தால் அந்த ஊர் மக்கள் அனைவரும் அங்கு வந்து உங்கள் மீது நெருப்பு வைப்பார்கள். எனவே, குற்றவாளிகள் இதை பார்த்தால் உடனே குழந்தையை விடுவித்துவிடுங்கள். மக்கள் வசிக்கும் பகுதியில் குழந்தையை விடுவியுங்கள். போலீஸ் உங்களை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறது. ஆறு வயது குழந்தையை வைத்து விலை பேசுவது அறிவற்ற செயல். சட்டத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது” என்றார்.
இதற்கிடையே குழந்தையை கடத்திச்சென்ற கார் ஒரு வாரம் முன்பும் அந்த பகுதிக்கு வந்ததாகவும், காரில் இருந்தவர்கள் குழந்தைகளை நோட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குழந்தையின் தாய்க்கு போன் வந்த பாரிப்பள்ளியில் உள்ள கடைக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். கடைக்குச் சென்று போனில் பேசியவரின் அங்க அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தி, குழந்தையை கடத்திய கும்பலைச் சேர்ந்தவரின் வரைபடம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் தவறு இல்லாத துரித விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் போலீஸ் டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தவறான தகவல்களை பரப்பக்கூடாது எனவும் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.