16 வயது சிறுவனை 4 பேர் தாக்கியதில் உயிரிழப்பு.. சிறுவனின் உயிரை பறித்த எருமை!!
ஜார்க்கண்டில் எருமை மாட்டின் மீது பைக்கை மோதிய 16 வயது சிறுவனை 4 பேர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சந்தாலி தோலாவில் உள்ள குர்மஹாத் பகுதியை சேர்ந்தவர் பாலகனோர்வா (16). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டு நண்பர்களுடன் கால்பந்து போட்டியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். ஹன்ஸ்திஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ததி கிராமத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சிறுவன் பயணித்த மோட்டார் சைக்கிள் எருமை மீது மோதியதும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது எருமையின் உரிமையாளரிடம் இழப்பீடு தருவதாக சிறுவன் தெரிவித்துள்ளார். ஆனால், அவரை நான்கு பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். சிறுவனுடன் வந்த அவரது இரண்டு நண்பர்கள் தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தொடர்ந்து பலத்த காயமடைந்த சிறுவன் சாரையாஹட்டில் உள்ள சமூக சுகாதார மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். இருந்தும் அந்த சிறுவன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளிகளை கைது செய்ய கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரண்டு நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.