கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவால் உயிரிழந்த 15 வயது சிறுவன்.. அறிகுறி என்ன?

 
Kerala Kerala

கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா பானாவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அனில் குமார். இவரது மனைவி ஷாலினி. இந்த தம்பதிக்கு குருதத் (15) என்ற மகன் உள்ளான். இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், மாணவன் குருதத் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் சிலருடன் அங்குள்ள குளத்தில் குளிக்கச் சென்றான்.

குளத்தில் குளித்து விட்டு வீட்டிற்கு வந்த பிறகு அவனுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகும் அவனுக்கு உடல் நிலை சரியாகவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக சம்பந்தம் இல்லாமல் பேச தொடங்கினான். அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் ஆலப்புழா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

Brain

அங்கு பரிசோதனை நடத்தியதில் மாணவன் குருதத், அமீபா தாக்குதல் காரணமாக பரவும் ‘பிரைமரி அமீபிக் மெனிஞ்சோயென்சி பாலிட்டிஸ்’ என்னும் அபூர்வ நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சிறுவன் குருதத் அங்கேயே சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அபூர்வ நோய்க்கு சிறுவன் பலியாகி உள்ள சம்பவம் கேரள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது, “சிறுவன் குருதத் இறப்பதற்கு அபூர்வ ‘பிரைமரி அமீபிக் மெனிஞ்சோயென்சி பாலிட்டிஸ்’ நோய் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நோய் பாதிக்கிறது. இந்த நோய் தாக்கினால் 100 சதவீதம் மரணம் உறுதியாகும். இந்த நோய் தாக்கி கேரளாவில் இதுவரை 5 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.

Veena-George

2016-ம் ஆண்டில் ஆலப்புழாவில் ஒருவரும், 2019 மற்றும் 2020-ல் மலப்புரம் மாவட்டத்தில் 2 பேரும், 2020-ல் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவரும், 2022-ல் திருச்சூர் மாவட்டத்தில் ஒருவரும் இந்த நோயிக்கு பலியாகி உள்ளனர். இந்த நோய் தாக்குதலுக்கு ஓடாமல் தேங்கி கிடக்கும் தண்ணீரில் உள்ள அமீபா தான் காரணம். தேங்கி கிடக்கும் அது போன்ற தண்ணீரில் குளித்தாலோ அல்லது முகம் கழுவினாலோ மூக்கு வழியாக உடலுக்குள் அமீபா புகுந்து மூளையை தாக்கும்.

இந்த அமீபாவை ‘பிரைன் ஈட்டர்’ என்று தான் அழைக்கப்படுகிறது. எனவே தேங்கி கிடக்கும் மற்றும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதையும், முகம் கழுவுவதையும் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

From around the web