கர்ப்பிணி நாயை துடிக்க துடிக்க அடித்துக்கொன்ற இளைஞர்கள்!! டெல்லியில் நடந்த கொடூரம்... பதைபதைக்கும் வீடியோ

 
Delhi-dog

டெல்லியில் குரைத்து தொந்தரவு செய்வதாகக் கூறி கர்ப்பமாக இருந்த நாயை அடித்துக் கொடூரமாக துடிக்க துடிக்க கொல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாய், பூனை மற்றும் பறவைகள் போன்ற செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்க அனைவருக்கும் ஆசை இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்லப்பிராணிகளை விரும்புவார்கள். வீட்டில் ஒருவர் போன்று செல்லப்பிராணிகளும் நம்முடன் இணைந்திருக்கும்.

அந்த வகையில் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகளில் முதலிடத்தில் நாய்தான் உள்ளது. ஒருவேளை உணவு கொடுத்தாலும் கூட நம்மை மறக்காது வாலாட்டிக்கொண்டு எப்போதும் நம்மை சுற்றி வரும். எஜமானர்களுக்கு நாய் அளவுக்கு வேறு எந்த விலங்கும் விசுவாசமாக இருக்காது. அப்படிப்பட்ட நன்றி உள்ளம் கொண்ட நாயை இரக்கமின்றி அடித்து கொன்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

Delhi-Dog

டெல்லியில் டான்பாஸ்கோ தொழில்நுட்ப கல்லூரி ஒன்று உள்ளது. டெல்லியில் உள்ள பிரபலமான கல்லுரிகளில் ஒன்றான இந்த கல்லூரி வளாகத்திற்குள் கர்ப்பமாக இருந்த தெருநாய் ஒன்று நுழைந்துள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் இருந்த ஒரு தகரத்தால் ஆன ஷெட் ஒன்றிற்குள் இருந்த நாய், குரைத்து தொந்தரவு செய்வதாகக் கூறி மாணவர்கள் அடித்துக் கொல்ல முடிவு செய்து இருக்கின்றனர்.

இதற்காக கையில் இரும்பு ராடுகள், பேஸ்பேல் பேட், மரக்கட்டைகளுடன் நாய் பதுங்கியிருந்த ஷெட்டை சுற்றி நின்றனர். ஒரு மாணவன் மட்டும் நாயை கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்ல மீதமுள்ள மாணவர்கள் சிரித்துக்கொண்டே இந்தக் காட்சிகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி பார்ப்பவரை பதைபதைக்க வைத்துள்ளது. சிறிது நேரத்தில் துடிதுடிக்க இறந்து போன அந்த நாயின் காலை பிடித்து ஒருவர் வெளியே இழுத்து போடுகிறார்.


இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீடியோவில் இருந்த மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரியில் உள்ள ஊழியர் பேச்சைக் கேட்டு இந்த மிருகத்தனமான செயலில் மாணவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web