பெண்கள் லிவ் இன் உறவில் வாழக்கூடாது... டெல்லி கொலை குறித்து ஒன்றிய அமைச்சர் கருத்தால் சர்ச்சை!

டெல்லி இளம் பெண் கொடூர கொலை குறித்து மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (26). கால் சென்டரில் பணியாற்றி வந்த அவருக்கு 2019-ம் ஆண்டில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லிக்கு வந்த காதல் ஜோடி, மஹரவுலி தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவன் காதலி ஷ்ரத்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்தான். கொலையை மறைக்க உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார்.
இந்த கொடூர கொலை நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இது குறித்து மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது. டெல்லி இளம்பெண் கொலை குறித்து அமைச்சர் கிஷோர் கூறியதாவது, “நன்கு படித்த பெண்களுக்குத்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. தாங்கள் வெளிப்படையாக இருப்பதாக நினைத்து, தங்கள் எதிர்காலத்தின் முடிவுகளை அவர்கள் தன்னிச்சையாக எடுக்கிறார்கள்.
அவர்கள் ஏன் லிவ் இன் வாழ்க்கையில் இருக்க வேண்டும். பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடி திருமணம் செய்து வாழ வேண்டும். எனவே, படித்த பெண்கள் தங்கள் வாழ்க்கை பொறுப்புடன் வாழ வேண்டும். இது போன்ற லிவ் இன் உறவில் வாழ்வதை அவர்கள் செய்யக்கூடாது” என்றுள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்து பாதிக்கப்பட்ட பெண்களை குறை சொல்வதாக இருப்பதாக பலரும் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி ட்விட்டரில் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.