தாயிடம் இருந்து குழந்தையை பறித்துச் சென்ற ‘உருள் பொட்டல்’.. கேரளாவில் நெஞ்சை உலுக்கிய சோகம்!!

 
kerala

கேரளாவில் ஏற்பட்ட உருள் பொட்டல் காரணமாக தாயிடம் இருந்த குழந்தையை இழுத்துச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை, மத்திய தெற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த 757 பேர் மீட்கப்பட்டு 49 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதில் கண்ணூரில் மலையில் இருந்து பாய்ந்து வந்த வெள்ளத்தில் சிக்கி நுமா தஸ்லின் என்ற இரண்டரை வயது சிறுமி இறந்த சம்பவம் கேரளாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Kannur

கேரள மாநிலம் கண்ணூர் கணிச்சார் பகுதியைச் சேர்ந்தவர் ஷபீர் நாசர். இவரது மனைவி நதீறா. இவர்களுது மகள் நுமா தஸ்லின். பத்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இந்த தம்பதி, தவமிருந்து பெற்ற குழந்தை நுமா தஸ்லின். கடந்த திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் பெரும் இரைச்சலுடம் மழை வெள்ளமும் சேறும் கலந்து பாய்ந்து வந்தது. 

நிலச்சரிவுடன் தண்ணீரும் சேர்ந்து உயரமான பகுதியில் இருந்து பாய்ந்து வருவதை `உருள் பொட்டல்' என கேரள மக்கள் கூறுவார்கள். உருள் பொட்டலால் வீட்டுக்குள் சேறும், தண்ணீரும் நிரம்பிவிடும் என்பதால் குழந்தை நுமா தஸ்லினையும் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடியுள்ளனர்.

தாய் நதீறா தனது மகள் நுமா நஸ்லினினை அணைத்தபடி கைகளில் வைத்துள்ளார். அப்போது சேற்றுத் தண்ணீருடன் சேர்ந்து வந்த ஒரு மரக்கிளை நதீறாவின் கையில் வேகமாக இடித்ததால் நதீறாவும் மகள் நுமா நஸ்லினும் தூக்கிவீசப்பட்டு சேற்றுத் தண்ணீரில் சிக்கினர். சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் ஒரு தென்னை மரத்தில் தட்டி நின்றனர். 

kannur

அப்போது தண்ணீர் அதிக அளவில் சென்றதால் அவர்களை காப்பாற்ற ஊர் மக்களால் முடியவில்லை. இதற்கிடையே வேகமாக பாய்ந்து சென்ற தண்ணீர் நதீறாவின் கையில் இருந்த நுமா நஸ்லினினை இழுத்துச் சென்றது. நதீறா தென்னை மரத்தை பிடித்தபடி தப்பிக்க போராடிக் கொண்டிருந்தார். 

பின்னர் தீயணைப்பு வீரர்கள் சென்று நதீறாவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. குழந்தை நுமாவை தண்ணீர் அடித்துச் சென்றது. அவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. குழந்தை நுமாவின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். நதீறா கணிச்சார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக உள்ளார். நுமா மறைவுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web