வரலாறு காணாத வசூல்... சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானத்தில் புதிய சாதனை!!

 
Sabarimala

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வருமானம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் ஐயப்பசாமி பிரம்மச்சாரியாக தவம் செய்து வருகிறார். ஐயப்பனை தரிசனம் செய்ய மாதந்தோறும் பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். கார்த்திகை மாதம் முதல் தை மாத பிறப்பு வரை மண்டல மகர பூஜை காலமாகும்.

சபரிமலையில் பிரம்மச்சாரியாக தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். ஆண்டு தோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து தரிசனம் செய்ய மலையேறி வருகின்றனர். கடந்த நவம்பர் 16-ம் தேதியன்று இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.

Sabarimala

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை நடை திறக்கப்படுவது முதல் இரவு கோவில் நடை அடைக்கப்படுவது வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பதினெட்டாம் படியேறி சபரிமலை ஐயப்பனை தரிசத்தனர். முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கொட்டும் பழை, பனி என்றும் பார்க்காமல் ஒரு நாளைக்கு 2 லட்சம் பேர் வரை தரிசனம் செய்து வந்தனர்.

டிசம்பர் 28-ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டு, பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. ஜனவரி 14-ம் தேதி மகரசங்கராந்தி பூஜை, மகரவிளக்கு பூஜை ஆகியவற்றை தொடர்ந்து மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. அதற்கு பிறகும் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஜனவரி 19-ம் தேதியான இன்று இரவு கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டு சீசனில் ரூ.320 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Sabarimala

இதற்கு முன் 2018-ம் ஆண்டு ஐயப்ப சீசனின் போது ரூ.260 கோடி வசூல் ஆனதே அதிகபட்ச வருமானமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் புதிய சாதனையாக நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web