புதுவையில் சோகம்.. 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை.. தந்தை கண்டித்ததால் விபரீதம்!

 
Balamurugan

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சக்திமுருகன், பாலமுருகன் என்று இரு மகன்கள் உள்ளனர். இதில் சக்திமுருகன் காரைக்கால் நவோதயா பள்ளியிலும், இவர்களது 2-வது மகன் பாலமுருகன் (14) தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

Suicide

பாலமுருகன் புதுவை வேல் சொக்கநாதன் திருமண மண்டபம் அருகில் உள்ள டியூசன் சென்டரில் படித்து வந்தான். தினமும் காலை 5 மணிக்கு பாலமுருகனை அவரது தந்தை டியூசனுக்கு அழைத்து சென்று பின் 7 மணிக்கு திரும்பி வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

ஆனால் நேற்று முன்தினம் டியூசனுக்கு பாலமுருகன் செல்லவில்லை. இதனை தசரதன் கண்டித்ததால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். பாலமுருகன் மட்டும் வீட்டில் இருந்தான்.

Muthialpet-PS

இந்த நிலையில் மாலையில் வேலையை முடித்து விட்டு தசரதன் வீட்டிற்கு வந்தார். அப்போது பாலமுருகன் வீட்டின் 2-வது மாடியில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web