இரக்கமில்லாமல் முதியவரை அடித்து தலைகீழாக தொங்க விட்ட காவலர்!! வைரல் வீடியோ

 
Jabalpur

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவரை காவலர் இரக்கமில்லாமல் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் முதியவரை இரக்கமில்லாமல் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. சுமார் 30 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், எழுந்திருக்க முயற்சிக்கும் முதியவரை கால்களால் மிதித்தும் கைகளால் குத்தியும் அந்த காவலர் தாக்கினார். மேலும் பெல்டால் தாக்கியதுடன் அந்த முதியவரின் கால்களைப் பிடித்து இழுத்துச் சென்று ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்க விட்டு ரசித்தார்.

Jabalpur

இதை பொதுமக்கள், பயணிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த காட்சிகளை ரயில் பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவக்காட்சிகள், சமூகவலைத்தளங்களில் இன்று வைரலாகி உள்ளது.

இதைக் கண்ட மத்தியப் பிரதேச மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு முதியவர் என்றும் பாராமல், அவரை மிருகத்தனமாக காவலர் ஒருவர் தாக்கியது காவல்துறை வட்டாரம் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட காவலர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து காவல்துறை ஏஎஸ்பி பிரதிமா படேல் கூறுகையில், “ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவரை காவலர் அனந்த் மிஸ்ரா தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, ​​முதியவரைத் தாக்கிய காவலர் ரேவா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிவது தெரியவந்தது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறினார்.

From around the web