ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கு.. நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!!

 
Jallikattu-SC

தமிழர்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்பு தொடர்ந்த வழக்கை நவம்பர் 29-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் காட்சிபடுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடத்தப்பட்ட கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவால் 2017-ல் ஜல்லிக்கட்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Jallikattu

இதனையடுத்து மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் சிலரால் போராட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் நடந்தன. மக்களின் இந்த கிளர்ச்சியால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் தர மக்கள் புரட்சி வென்று தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக பல்வேறு தமிழின விரோத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன. இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவ்வழக்குகள் மீதான விசாரணை நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேரம் இல்லாததால் இந்த மனுக்கள் அனைத்தும் இன்று (நவ. 24) காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Jallikattu-TN

அதன்படி உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பில் இருந்தும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டத்தை இயற்றிய சட்டப்பேரவையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம் என்று தெரிவித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

From around the web