உடுப்பியில் தமிழ்நாடு வாலிபர் கட்டையால் அடித்து படுகொலை; இருவர் கைது!!

 
murder

தமிழ்நாட்டை சேர்ந்தவர் குமார் (32) என்பவர், உடுப்பி டவுனில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குமார், உடுப்பி டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். இதற்கிடையே தமிழ்நாட்டை சேர்ந்த குட்டி, நவீன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து கோவாவுக்கு செல்ல ரயில் மூலம் மங்களூருவுக்கு வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து கோவாவுக்கு செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த ரயில் உடுப்பி ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றுள்ளது. அப்போது ரயில் புறப்பட நேரம் இருந்ததால் குட்டியும், நவீனும் அருகே இருந்த மதுக்கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் குமார் மற்றும் குட்டி, நவீன் அறிமுகமாகி பேசியுள்ளனர்.

Udupi

இதையடுத்து 3 பேரும் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் கடையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த குமார், அவர்கள் 2 பேரில் ஒருவரின் தாய் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து குமாரின் தலையில் சரமாரியாக அடித்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த குமார், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கொலையான குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

udupi

விசாரணையில் குடிபோதையில் குமார், 2 பேரில் ஒருவரின் தாய் பற்றி அவதூறாக பேசியதால் அவர்கள் கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web