பெங்களூரில் திடீர் பண மழை... சாலையில் பணத்தை அள்ளி அள்ளி இறைத்த ‘வள்ளல்’ அதிரடி கைது..!

பெங்களூரு சாலையில் பணத்தை அள்ளி அள்ளி இறைத்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் கோர்ட்-சூட் அணிந்து டிப்-டாப் ஆக ஆசாமி ஒருவர் வந்து இறங்கினார். அவர் தனது கழுத்தில் பெரிய சுவர் கடிகாரத்தை கட்டியிருந்தார். பின்னர் தான் தோளில் போட்டிருந்த பையில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து மேம்பாலத்தின் மீது இருந்து மார்க்கெட் சாலையின் இடதுபுறம் வீசினார்.
இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் சில நிமிடங்கள் வியப்புடன் அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்தனர். மேம்பாலத்தில் இருந்து அந்த நபர் தொடர்ந்து பணத்தை வீசியபடி இருந்தார். அதன் பிறகு மேம்பாலத்தின் இடதுபுறம் சென்றும் ரூபாய் நோட்டுகளை கையில் அள்ளி வீசினார். இதனால் அப்பகுதியிலும் பணத்தை எடுக்க மக்கள் கூடினர்.
Man throws money from flyover in Bengaluru's KR Market. The video of the incident has gone viral.#India #Bengaluru #Viralvideos #Trending pic.twitter.com/oHzUqEr2JJ
— Backchod Indian (@IndianBackchod) January 25, 2023
இவ்வாறு திடீரென்று வாலிபர் மேம்பாலத்தில் நின்றபடி பண மழை பொழிந்ததால், அதனை எடுக்க பொதுமக்கள் பலரும் போட்டாபோட்டி போட்டு கொண்டனர். இதனால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த கே.ஆர்.மார்க்கெட் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. உடனே போக்குவரத்து போலீசாரும், கே.ஆர்.மார்க்கெட் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசார் வருவதை கண்டதும் பணத்தை வீசி எறிந்தபடி இருந்த டிப்-டாப் ஆசாமி அங்கு நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டரில் ஏறி வேகத்தில் தப்பிச் சென்றார். இதற்கிடையே மேம்பாலத்தில் இருந்து அந்த ஆசாமி ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்ததையும், அதனை மக்கள் எடுக்க போட்டாபோட்டி போட்டது தொடர்பான நிகழ்வை பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாகி பேசும் பொருளானது.
இதற்கிடையே கே.ஆர்.மார்க்கெட் போலீசாரும் பணமழை பொழிந்த நபர் பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில், மேம்பாலத்தில் இருந்து பணத்தை வீசியவர் பெங்களூரு நாகரபாவியை சேர்ந்த அருண் என்பதும், இவர் தொழில் அதிபர் என்பதும் தெரியவந்தது. யூ-டியூப் சேனல் நடத்தி வருவதுடன் அருண் வி டாட் 9 நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் 10 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் என ரூ.4 ஆயிரத்தை வீசியது தெரியவந்துள்ளது.
அவர் எதற்காக கழுத்தில் கடிகாரத்தை கட்டிக்கொண்டு வந்து மேம்பாலத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கே.ஆர்.மார்க்கெட் போலீசார் தாமாக முன் வந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக அருண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.