காலையில் பள்ளி மாணவன்... மாலையில் டெலிவரி பாய்... 7 வயது சிறுவனின் உருக்கமான வீடியோ

 
delhi-boy

தந்தை விபத்தில் சிக்கிய நிலையில் 7 வயது சிறுவன் வீடு வீடாகச் சைக்கிளில் சென்று உணவை அளித்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தலைநகர் டெல்லியைச் சேர்ந்த தந்தை விபத்தில் சிக்கியதால், 7 வயது சிறுவன் பள்ளி முடிந்ததும் சொமெட்டோ டெலிவரி  பாயாக வேலை செய்து வருகிறான். மாலையில் 6 மணிக்குத் தொடங்கும் உணவு டெலிவரி பணி இரவு 11 மணிக்கே நிறைவடைகிறது. அந்த சிறுவன் வீடு வீடாகச் சைக்கிளில் சென்று உணவை அளித்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Zomato

இந்த வீடியோவை ட்விட்டரில் ராகுல் மிட்டல் என்பவர் பதிவிட்டுள்ளார், இதனை 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சுமார் 30 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ராகுல் மிட்டல் சிறுவனிடம் ஏன் இதைச் செய்கிறாய் என்று கேட்கிறார். ஒரு கையில் சாக்லேட் பெட்டியை வைத்துக்கொண்டு, சிறுவன் தனது வேலை நேரம் மற்றும் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்ய சைக்கிளைப் பயன்படுத்துவதைப் பற்றி விளக்கமாக சொல்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள பதிவில், “இந்த 7 வயது சிறுவன் தனது தந்தையின் வேலையைச் செய்கிறான். அவனது தந்தை விபத்தில் சிக்கியதால் சிறுவன் காலையில் பள்ளிக்குச் செல்கிறான், 6 மணிக்குப் பிறகு அவன் சொமெட்டோவில் டெலிவரி பையனாக வேலை செய்கிறான். இந்த பையனின் ஆற்றலை ஊக்குவித்து அவனது தந்தைக்கு சொமெட்டோ நிறுவனம் உதவ வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள ட்விட்டர் பயனர்கள், சிறுவனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். அந்த சிறுவனின் முழு விவரத்தை பகிருமாறும் கோரிக்கை வைத்துள்ளனர். சிலர் இது தொழிலாளர் சட்டத்தை மீறுவதாக உள்ளது என சுட்டிக்காட்டினர்.

அதற்கு பதிலளித்த மிட்டல், சொமெட்டோ நிறுவனம் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு உதவ முன் வந்துள்ளது என்று கூறினார். மேலும் சிறுவனின் தந்தை மீண்டும் பணியைத் தொடங்கும் வரை அவரின் உணவு விநியோக கணக்கு முடக்கப்படும் என்றும் கூறினார்.

From around the web