பாஜகவின் நிர்வாகியின் ரிசார்ட்டில் விபச்சாரம்... மேகாலயாவில் பரபரப்பு

 
BJP-leader

மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மரக் என்பவருக்குச் சொந்தமாக துரா பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சோதனை நடத்தியதில் 73 பேரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மராக்கிற்குச் சொந்தமாக துரா பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட சோதனையில், அங்குச் சுகாதாரமற்ற சூழலில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 6 குழந்தைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அந்த ரிசார்ட்டில் 'விபச்சார விடுதி' இயங்கி வந்ததாகவும் பெர்னார்ட் மராக் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் இதுவரை 73 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், “மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களால் சரியாகப் பேசக் கூட முடியவில்லை. பெர்னார்ட் மராக்கும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் இந்த ரிசார்ட்டை விபச்சாரத்திற்காகப் பயன்படுத்தி உள்ளனர்” என்று கூறினர்.

rape

இந்தக் குற்றச்சாட்டுகளை பெர்னார்ட் மராக் முற்றிலுமாக மறுத்துள்ளார். எவ்வித விதிமுறைகளும் விதிகளையும் பின்பற்றாமல் போலீசார் தனது ரிசாட்டில் அத்துமீறி நுழைந்து உள்ளதாகவும் அவர் சாடி உள்ளார். அவர் மேலும் கூறுகையில், “கைது செய்யப்பட்டவர்கள் யாரும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடவில்லை. நான் படிக்க ஸ்பான்சர் செய்த மைனர் மாணவர்களை போலீசார் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். அவர்கள் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். வயது வந்த நபர் பார்டி செய்வதை விபசாரம் என்று அழைக்க முடியாது. அவர்கள் பார்டி செய்யும் ரிசார்டை விபச்சார விடுதி என்று அழைக்க முடியாது” என்றார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மைனர் சிறுமி ஒருவரைக் காணவில்லை என்று அவரது தாயார் புகார் அளித்துள்ளனர். அந்த ரிசார்ட்டில் அச்சிறுமியை அவரது உறவினர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு வாரத்தில் அச்சிறுமி பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக அச்சிறுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் முக்கிய குற்றவாளியும் அவனது நண்பர் ஒருவரும் தன்னையும் தனது தோழியையும் ரிம்பு பாகனுக்கு அழைத்துச் சென்று பல பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதி மக்களும் அந்த ரிசார்ட் தொடர்பாகப் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

police

போலீசார் அங்குச் சோதனைக்கு வந்த போது, அங்குப் பல மைனர் சிறுவர்- சிறுமிகள் மது குடித்து இருந்துள்ளனர். அவர்களில் பலரும் ஆடையில்லாமல் இருந்ததாகவும் அவர்களைப் பிடிக்க முயன்ற போது, அவர்களில் சிலர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அங்கிருந்து 36 வாகனங்கள், 46 மொபைல், பல லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

From around the web