ஒடிசா சட்டசபையின் எதிர்க்கட்சி துணை தலைவர் பிஷ்ணு சரண் சேத்தி காலமானார்!

ஒடிசா சட்டசபையின் எதிர்க்கட்சி துணை தலைவர் பிஷ்ணு சரண் சேத்தி காலமானார். அவருக்கு வயது 61.
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தின் திரிஹரி தொகுதிக்கு உட்பட்ட மங்கராஜ்பூர் கிராமத்தில் வசிப்பவர் பிஷ்ணு சரண் சேத்தி. கடந்த 2000-ம் ஆண்டு பாஜக சார்பில் ஒடிசா சட்டசபை உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 2019-ம் ஆண்டு பத்ரக் மாவட்டத்தின் தாம்நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா சட்டசபையின் எதிர்க்கட்சி துணை தலைவராக செயல்பட்டதுடன், பாஜகவின் ஒடிசா துணை தலைவர் பதவியையும் வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இவர், புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பு மற்றும் மூளையில் ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகளால் 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
மாநில பாஜக தலைவர் சமீர் மொஹந்தி கூறுகையில், சேத்தி இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக டயாலிசிஸ் செய்து வருகிறார்.
எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறுகையில், சேத்தி பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். ஏறக்குறைய ஒரு மாதமாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஐசியு பிரிவில் வைக்கப்பட்டார், ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனை எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறினர்.
அவரது மறைவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்து கொண்டார். ஒடிசா ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், சேத்தியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.