இனி ஆதார் கட்டாயம் - யுஐடிஏஐ அதிரடி

 
Aadhar Aadhar

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

யுஐடிஏஐ (UIDAI) எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம், ஆதார் அட்டைகளை வினியோகித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள், வங்கி சேவைகள் உட்பட பல்வேறு விதமான சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7-ன் படி, ஆதார் அட்டை பெறாதவர்கள், அரசு அளித்துள்ள இதர அதிகாரப்பூர்வ அடையாள அட்டை வாயிலாக சேவைகளை பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற, ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடந்த வாரம் அனைத்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Aadhar

அந்த சுற்றறிக்கையில்,  ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள் ஆகியவற்றை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், அட்டை வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். அட்டை கிடைக்கும் வரை, விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுடன், அரசு அளித்த அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் சேர்த்து சமர்ப்பித்து உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல, ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகின்றன. இந்த உதவிகளை பெற தகுதியுடையவர்கள், சில குறிப்பிட்ட சான்றிதழ்களை அரசிடம் இருந்து பெற வேண்டும். அந்த சான்றிதழ்களை பெறுவதற்கும் ஆதார் எண் அல்லது விண்ணப்ப ஒப்புகை சீட்டு இனி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Adhar

இதற்கிடையே, ஆதார் எண்களை வெளிப்படையாக தெரிவிப்பதன் வாயிலாக தங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் வெளியே கசிவதை சிலர் விரும்பவில்லை. இதை எதிர்கொள்ள, விஐடி எனப்படும் ‘விர்ச்சுவல் ஐடென்டிபையர்’ என்ற சேவையை சமீபத்தில் யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆதார் எண் உள்ளவர்கள், ஆன்லைன் வாயிலாக தங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்தால், அவர்களுக்கு 16 இலக்க தற்காலிக எண் வழங்கப்படும். அந்த எண்ணை தெரிவித்து, பயனாளர்கள் சேவைகளை பெற்றுக் கொள்ள வழி செய்யப்பட்டது.

ஆனால், சில சமூக நலத்திட்ட உதவிகள் சிக்கலின்றி செயல்பட முழுமையான ஆதார் எண் அவசியம் என்பதால், சம்பந்தப்பட்ட துறைகள் மட்டும் பயனாளர்களிடம் முழுமையான ஆதார் எண்ணை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web