வானில் இருந்து திடீரென விழுந்த மர்ம பந்து.. பொதுமக்கள் பீதி!!

 
space-derbis

விண்வெளியில் இருந்து வந்த உலோக பந்து ஒன்று குஜராத்தில் விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12-ம் தேதி குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பலேஜ், கம்போலாஜ் மற்றும் ராம்புரா ஆகிய மூன்று இடங்களில் விண்வெளியில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பந்துகள் விழுந்தன. பெரும் சத்தத்துடன் விழுந்த அந்த உலோக பந்துகளை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விண்வெளியில் இருந்து விழுந்த அந்த பொருள் சுமார் 5 கிலோ எடையுள்ள ஒரு பெரிய கருப்பு உலோக பந்து ஆகும். இந்த மர்ம பொருள் விழுந்த மூன்று கிராமங்களும் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இதனால் மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த பொருளை மீட்டு, தடய அறிவியல் ஆய்வகத்தில் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து, குஜராத் மாநிலம் ஆன்ந்த் மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன் கூறுகையில், இந்த உலோக பந்தானது செயற்கைக்கோள் குப்பைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக குறிப்பிட்டார். முதல் பந்து மாலை 4.45 மணியளவில் விழுந்தது அடுத்த சிறிது நேரத்தில் மற்ற இரண்டு இடங்களில் உலோக பந்துகள் விழுந்தன. காம்போலாஜில் ஒரு வீட்டின் மீது இந்த பந்து விழுந்துள்ளது, பிற 2 பகுதிகளிலும் திறந்த வெளி பகுதிகளில் விழுந்திருக்கிறது.

இது என்ன வகையான விண்வெளி பந்துகள் என்பது தற்போது வரை தெரியவில்லை, ஆனால் கிராம வாசிகள் தகவலின்படி இது வானத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. தடய அறிவியல் துறையின் அறிக்கை வரும் வரை காத்திருக்கப்படும் எனவும் அதிகாரிகளும் பொருட்கள் என்னவாக இருக்கக்கூடும் என்பதை கண்டறிய முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

From around the web