லோன் ஆப் மூலம் கடன்... மிரட்டிய கும்பல்... விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை!!

 
Andhra

ஆந்திராவில் கடன் செயலி மூலம் கடன் வாங்கிய கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள தாட்சே பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் வெங்கட் சிவா. இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இன்டர்மீடியட் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அவசர தேவைக்காக லோன் ஆப் மூலம் 4 ஆயிரம் ரூபாய் வெங்கட் சிவா கடன் வாங்கி இருந்தார். கல்லூரி முடிந்தவுடன் தாட்சே பள்ளியில் உள்ள ஒரு ஓட்டலில் பகுதி நேரமாக வேலை செய்து இதுவரை 16 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். மேலும் 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என லோன் ஆப் கும்பல் வெங்கட் சிவாவை மிரட்டி வந்தனர்.

Apps

இந்நிலையில், வெங்கட் சிவாவின் செல்போனில் இருந்த அவரது நண்பர்களின் செல்போனுக்கு, வெங்கட் சிவா மோசடி பேர்வழி, பிராடு என எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினர். இதனால் மனமுடைந்த வெங்கட் சிவா, இது குறித்து தனது தந்தைக்கு தெரிவித்தார். இதைக்கேட்டு அவரது தந்தையும் பணத்தை தயார் செய்து தருகிறேன் எதற்கும் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறியுள்ளார்.

இருப்பினும், நேற்று கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த வெங்கட் சிவா வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாட்சேபள்ளி போலீசார் வெங்கட் சிவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Suicide

நேற்று முன்தினம் ஒரு தம்பதி தற்கொலை செய்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், லோன் ஆப்புகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

From around the web