புஷ்பா பட பாணியில் கடத்தல்... ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 9 தமிழர்கள் கைது!!

 
Andhra

ஆந்திராவில் செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 9 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள அன்னமையா மாவட்டம் சுண்டுப்பள்ளியில் இருந்து வி.கோட்டா வழியாக டாடா சுமோ வாகனத்தில் செம்மர கட்டைகளை கடத்திச் சென்றதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பலமநேரி டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மாவட்ட எஸ்பி ரிஷாந்த் ரெட்டி உத்தரவின் பேரில், வி.கோட்டா எஸ்.எஸ்.ராம்புபால் தலைமையிலான போலீசார், தனமய்யகரிபள்ளில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடியதாகவும், பின்னர் 9 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் சட்டவிரோதமாக செம்மர கட்டைகளை கடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

Andhra

வி.கோட்டாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் தமிழ்நாட்டில் இருந்து கூலித் தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு சென்று, சுண்டுப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு செம்மரக் கட்டைகளை கடத்தி வந்துள்ளனர். 

அப்போது தனமய்யகரிபள்ளே என்ற இடத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த வழியே வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டனர். இதில், ஒரு டன் எடையிலான 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 46 செம்மரக் கட்டைகள் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், அவர்கள் ஓட்டி வந்த டாடா சுமோ வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

VKota

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநில பதிவெண் கொண்ட டாடா சுமோ வாகனத்தில் பயணம் செய்த, துரைசாமி, சங்கர், ராமன், செல்வம், தங்கராஜ், ஏழுமலை, பிரகாஷ், மசாலாமலை, சுப்ரமணி ஆகிய 9 பேர் என்பதும், இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் 9 பேரையும் கைது செய்த ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web