குமரி டூ காஷ்மீர் வரை... பாதியில் முடிந்த ஸ்கேட்டிங் பயணம்!! லாரி மோதி இளைஞர் பலி!!

 
kerala-skater

ஸ்கேட்டிங் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்ட பயணத்தின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாறமூடு அடுத்த புல்லம்பாற அஞ்சாம்கல் பகுதியில் வசித்து வருபவர் அனஸ் ஹஜாஸ் (30). இவர் பீகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஸ்கேட்டிங் சாகசம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், புதிதாக சாதிக்க எண்ணி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் சாகச பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார்.

kerala-skaters

அதன்படி, கடந்த மே மாதம் 29-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது சாகச பயணத்தை தொடங்கிய அனஸ் ஹஜாஸ், மதுரை, பெங்களூர், ஐதராபாத் வழியாக பயணித்தார். மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் தாண்டி அரியானா மாநிலத்தை அடைந்துள்ளதாகவும், இன்னும் சுமார் 15 நாட்களில் காஷ்மீர் சென்று தனது சாகச பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஓவ்வொரு முக்கிய பாயிண்ட்களை கடக்கும்போதும் ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிட்டும் வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி சாலை விபத்தில் அனஸ் உயிரிழந்தார். அனஸ் ஹஜாசின் மொபைல் போனில் அவர் நண்பரிடம் விபத்து நடந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடல் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அனஸ் ஹஜாசின் உடலை பெறுவதற்காக அவரது உறவினர்கள் அரியானா சென்றுள்ளனர்.

dead-body

யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்தவர், ஸ்கேட்டிங் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணத்தை தொடங்கினார். தன் லட்சியத்தை எட்டிப்பிடிக்க இருந்த சமயத்தில் உயிரிழந்துள்ளார். அனஸ் ஹஜாசின் மரணம் ஸ்கேட்டிங் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web