இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு!!

 
draupathi-murmu

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம், நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.

எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்.

draupathi-murmu

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறைப்படி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 99.18% சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரௌபதி முர்முவுக்கு தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்பு முதன்முதலாக திரௌபதி முர்மு பேசும்போது, “குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டது பெருமை அளிக்கிறது. என்னை தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு பெரும் பலமாக இருக்கும். எனது வலிமை என்பது நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான். இந்த பதவியை கவுரவிக்கும் வகையில் நான் செயல்படுவேன்” என்று கூறினார்.

draupathi-murmu

பதவியேற்பு விழா நிகழ்ச்சியில், ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், மக்களவை எம்.பி.க்கள், முப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

From around the web