டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் பலி!

 
cyrus-mistri

மும்பை அருகே நடந்த கார் விபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் எனும் இடத்தில் பிற்பகல் 3.15 மணியளவில் அவரது பென்ஸ் கார் எதிர்பாராதவிதமாக டிவைடரில் மோதியதில் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சூர்யா ஆற்றின் பாலத்தில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

cyrus-mistri

விபத்துக்குள்ளான காரில் 4 பேர் இருந்ததாகவும் அவர்களில் சைரஸ் மிஸ்திரி உட்பட இருவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த கார் ஓட்டுநர் உட்பட இருவர் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்டோபர் 2016-ம் ஆண்டு டாடா சன்ஸ் குழும தலைவர் பதவியில் இருந்து முறைகேடு புகார் காரணமாக சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு மராட்டிய மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

cyrus-mistri

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மும்பை அருகே பால்கர் பகுதியில் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இது தொடர்பாக போலீஸ் டிஜிபி உடன் பேசி உள்ளேன். விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

From around the web