ஜம்மு காஷ்மீரில் அதிவேகத்தில் மோதிக் கொண்ட பேருந்துகள்... பிஞ்சு உயிரை பறித்த கோர விபத்து!!

 
Jammu

ஜம்மு காஷ்மீரில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டம் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 13 வயது சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

Accident

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சம்பா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்துள்ள 7 பேர் வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சம்பா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் பாரத் பூஷன் தெரிவித்தார்.

முதற்கட்ட தகவல்களின்படி, ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் நானகே சௌக் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தை வேகமாக வந்த மற்றொருபேருந்து முந்திச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியைச் சேர்ந்த மங்கி தேவி (36), அவரது 13 வயது மகள் தானியா மற்றும் ராஜ்பூரைச் சேர்ந்த கஸ்தூரி லால் (58) ஆகியோர் உயிரிழந்தனர். ஒரு பேருந்து சஹாரன்பூருக்கும் மற்றொன்று கதுவா மாவட்டத்துக்கும் சென்று கொண்டிருந்தது.

Jammu

விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தோடா மற்றும் சம்பாவில் நடந்த சாலை விபத்து வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என சம்பா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சிறு காயங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டது.

From around the web