#BREAKING: இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு தேர்வு

 
Draupati-murmu

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக தற்போதுள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம், வரும் 24-ம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

Draupati-murmu

அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர்.

இதில் மொத்தமுள்ள 771 எம்.பி.,க்களில் 763 பேரும், 4,025 எம்எல்ஏ.,க்களில் 3,991 பேரும் வாக்களித்தனர்.இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. மூன்றாவது சுற்றின் முடிவில் திரௌபதி முர்முவுக்கு 2,161 வாக்குகள் கிடைத்தன. இதன் மதிப்பு 5,77,777 ஆகும். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1,058 ஓட்டுகள் கிடைத்தது. இதன் மதிப்பு 2,61,062 ஆகும்.

இதன் மூலம் திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 71.7 சதவீத வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகளுடன் வெற்றிப்பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹா 28.3 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

draupadi-murmu

முன்னாள் மத்திய அமைச்சரும் குடியரசு தலைவர் வேட்பாளருமான யஷ்வந்த் சின்ஹா தனது ட்விட்டரில், ​​2022 குடியரசுத் தலைவர் தேர்தலில் ஸ்ரீமதி திரௌபதி முர்மு வெற்றி பெற்றதற்கு எனது சக குடிமக்களுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசின் 15வது குடியரசுத் தலைவராக அவர் அச்சமோ, ஆதரவோ இல்லாமல் அரசியலமைப்பின் பாதுகாவலராகச் செயல்படுவார் என்று இந்தியா நம்புகிறது என்று கூறியுள்ளார்.

From around the web