இந்திய ராணுவ தளபதியாக பொறியாளராக பணியாற்றிய மனோஜ் பாண்டே நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு

 
Lt-Gen-Manoj-Pande-becomes-first-engineer-to-be-appointed

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டேவை ஒன்றிய அரசு நியமனம் செய்துள்ளது.

இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் 29-வது ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே உள்ளார். அவரது 28 மாத பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து அடுத்த ராணுவ தளபதியாக யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், இந்தியாவின் புதிய ராணுவ தளபதியை நியமித்து ஒன்றிய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஓய்வு பெற்ற பிறகு, அதாவது வரும் 30-ம் தேதி முதல் ராணுவத்தின் புதிய தளபதியாகப் பொறுப்பு ஏற்க உள்ளார்.

இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ராணுவ தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதுக்குறித்த ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ராணுவத்தின் அடுத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவரான பாண்டே 1982-ம் ஆண்டு டிசம்பரில் கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியராக நியமிக்கப்பட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பல்லன்வாலா செக்டரில் ஆப்ரேஷன் பராக்ரம் நடத்தப்பட்ட போது பொறியாளர் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியவர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே.

2001 நாடாளுமன்ற தாக்குதலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட நடவடிக்கை பராக்ரமில் நாட்டில் மேற்கு எல்லையில் பெரிய அளவிலான படைகள் மற்றும் ஆயுதங்களை இந்திய ராணுவம் அணி திரட்டியது. லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே தனது 39 ஆண்டுக்கால ராணுவ வாழ்க்கையில், பொறியாளர் படைப்பிரிவுக்கும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள காலாட்படைப் படைப் பிரிவுக்கும், லடாக் செக்டாரில் ஒரு மலைப் பிரிவுக்கும், வடகிழக்கில் ஒரு படைப் பிரிவுக்கும் தலைமை தாங்கி உள்ளார். தற்போது ராணுவத்தில் கிழக்கு பிரிவுக்கு பாண்டே தலைவராக உள்ள நிலையில், இதற்கு முன் அவர் அந்தமான் நிக்கோபார் படைப் பிரிவில் தளபதியாக இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்தியாவின் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

From around the web