பெண் மீது ஆசிட் வீச்சு - கைதி தப்பி ஓடியதால் துப்பாக்கிச் சூடு!! பெங்களூருவில் பரபரப்பு

 
Karnataka-girl-face-afected

கர்நாடக மாநிலம் பெங்களூரூ நகரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

அவரை காதலிக்க இளம்பெண் மறுத்த நிலையில், பெண் வேலைபார்க்கும் அலுவலகத்திற்கு சென்றும், அவரது வீட்டிற்கு சென்றும் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நாகேஷ் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி இளம்பெண்ணை சந்தித்த நாகேஷ் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மறுப்பு தெரிவிக்கவே தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை இளம்பெண் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தநிலையில்,  குற்றவாளியின் புகைப்படம் அடங்கிய தகவல்கள் குறித்து திருவண்ணாமலை நகரம் கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடப்படும் குற்றவாளி நோட்டீசை ஒட்டி தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே நாகேஷ் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் சாமியார் போல வேடமணிந்து வாழ்ந்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற கர்நாடக காவல்துறையினர் நாகேஷை கைது செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், பெங்களூருவில் போலீஸ் ஜீப்பில் இருந்தபோது கைதி நாகேஷ் கழிவறை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஜீப்பில் இருந்து இறக்கிவிட்ட நிலையில் போலீசை கல்லால் தாக்கிவிட்டு தப்ப ஓடு முயன்ற நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கியால் சுட்டதில் நாகேஷ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமணையில் அனுமதித்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web