புகையிலையை மென்று துப்பிய வாலிபர் கொடூர கொலை!! பொற்கோவில் பகுதியில் பரபரப்பு!

 
Punjab

பஞ்சாப்பில் புகையிலையை மென்று பொற்கோவில் பகுதியருகே துப்பிய விவகாரத்தில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் புனித கோவில் என அழைக்கப்படும் பொற்கோவில் அமைந்ததுள்ளது. அப்பகுதி அருகே தெரு ஒன்றில் ஹர்மன்ஜீத் சிங் (20) என்ற வாலிபர் தனது மோட்டார் பைக்கில் நின்று கொண்டு இருந்துள்ளார். சாத்திவிந்த் பகுதியை சேர்ந்த ஹர்மன்ஜீத் சிங், புகையிலையை மென்று கொண்டும், குடிபோதையில் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனால், நிஹாங் சீக்கியர்கள் இருவர் நேற்று நள்ளிரவில் அவரை அணுகியுள்ளனர். இந்த சீக்கியர்கள் மற்ற சீக்கியர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். இவர்களுக்கென ஒரு கட்டமைப்புடன் இருப்பவர்கள். போரின்போது, குரு கோவிந்த் சிங் அணிந்தது போன்ற நீல வண்ண ஆடைகளை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இவர்கள் புகை பிடிப்பது இல்லை. தங்களது பார்வையில் படும் புகைப் பிடிப்பவர்களையும் இவர்களுக்கு பிடிப்பது இல்லை என்பன போன்ற பல தனிப்பட்ட கொள்கைகளை கொண்டவர்கள்.

Punjab

இந்நிலையில், அந்த வாலிபரை நெருங்கியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, நிஹாங் சீக்கியர் ஒருவர் தன்னிடம் இருந்த வாள் ஒன்றை எடுத்து அவரை நெருங்குகிறார். இதனை கவனித்த வாலிபர், அவரிடம் திரும்ப வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அவர்கள் இதுகுறித்து ஹர்மன்ஜீத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திடீரென கைகலப்பு ஏற்படுகிறது. இதில், ஒருவரையொருவர் தாக்கி கொள்கின்றனர். சம்பவ பகுதியில் நின்றிருந்த 3-வது சீக்கியர் ஒருவர் உள்ளே புகுந்து அந்த வாலிபரை கடுமையாக தாக்குகிறார்.

இதில், பலத்த காயமடைந்த அந்த வாலிபர் தெருவோரம் விழுகிறார். தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன்பின்னர், காயங்களுடன் எழுந்து நிற்கும் அந்த வாலிபர் அந்த பகுதியில் இருந்து நடந்து செல்கிறார். இந்த காட்சிகள் அருகேயுள்ள ஓட்டல் ஒன்றில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன. எனினும், அந்த பகுதியில் நேற்று இரவு முழுவதும் அவரது உடல் கிடந்து உள்ளது.


காலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வந்த பின்னரே வாலிபர் உயிரிழந்த விவரம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல் ஆணையாளர் அருண்பால் சிங் கூறுகையில், சம்பவம் நடந்தபோது 6 முதல் 7 பேர் அந்த பகுதியில் நின்றிருந்து உள்ளனர். ஆனால், ஒருவர் கூட எங்களை அழைக்கவில்லை என்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.

ஹர்மன்ஜீத் சிங்கின் தாயார் கூறுகையில், விரைவில் வெளிநாட்டுக்கு செல்லும் முடிவுடன் தனது மகன் இருந்த விவரங்களை கூறிய பின்பு அவரால் எதுவும் பேச முடியவில்லை. இந்த சம்பவத்தில் ரமன்தீப் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர். புகையிலையை மென்று பொற்கோவில் பகுதியருகே துப்பிய விவகாரத்தில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

From around the web