அரியவகை நோய்.. உடல் முழுவதும் முடி... நம்பிக்கை இழக்காத 17 வயது சிறுவன்!

 
Lalitpaditar

மத்தியப் பிரதேசத்தில் 17 வயது சிறுவனுக்கு ‘வேர்வூல்ஃப் சிண்ட்ரோம்’ என்ற அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் நந்த்லேடா கிராமத்தைச் சேர்ந்தவர் லலித் படிதார் (17). 12-ம் வகுப்பு படித்து வரும் இவர், ‘வேர்வூல்ஃப் சிண்ட்ரோம்’ என்ற அரியவகை நிலையால், இவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய நோயால் ஒருவர் பாதிக்கப்படும்பட்சத்தில், அவரின் உடல் முழுதும் அசாதாரணமான முறையில் அதிகப்படியான முடி வளரும். இந்நோய் ஆண், பெண் இருவரையுமே பாதிக்கலாம். இடைக்காலத்தில் வாழ்ந்த மக்களில் 50 நபர்கள் மட்டுமே இந்த அரிய நிலையால் பாதிக்கப்பட்டார்கள் என்று நம்பப்படுகிறது. 

லலித்தின் உடல் முழுதும் முடியானது அதிகப்படியாக வளர்ந்துள்ளது. அவருடன் படிக்கும் மாணவர்கள் அவரை ‘குரங்கு பையன்’ என்றே அழைக்கின்றனர். அதோடு எங்கே தங்களைக் கடித்துவிடுவானோ என்று அச்சப்படுகின்றனர். 

Lalitpaditar

இது குறித்து லலித் படிதார் கூறுகையில், “நான் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய அப்பா ஒரு விவசாயி. நான் இப்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறேன். அதே நேரத்தில் என்னுடைய தந்தையின் விவசாய வேலைகளிலும் உதவி வருகிறேன்.

நான் பிறக்கையில், மருத்துவர் என்னை ஷேவ் செய்து கொடுத்தார் என என்னுடைய பெற்றோர் என்னிடம் கூறினார்கள். ஆனால், என்னுடைய 6 முதல் 7 வயது வரை பெரிய வித்தியாசம் ஏதும் எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகு, கவனித்தபோதுதான், என்னுடைய உடல் முழுதும் முடி வளர்வது தெரிந்தது. என்னுடைய குடும்பத்தில் இதற்கு முன்பு இதுபோன்ற பாதிப்புகள் இருந்ததில்லை. எனக்கு மட்டும்தான் இந்த நோய் உள்ளது.

சிறிய குழந்தைகள் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள். சிறுவயதாக இருந்தபோது எனக்கு இது பெரிதாகத் தெரியவில்லை, அதுவே நான் வளர்கையில், மற்றவர்களைப் போல நான் இல்லை, என்னுடைய உடல் முழுதும் முடி இருக்கிறது என்பதை அறிந்தேன். விலங்குகளைப்போல நான் கடித்துவிடுவேன் எனக் குழந்தைகள் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள்.


இந்த நிலைக்கு எந்தச் சிகிச்சையும் இல்லை. முடி நீளமாக இருப்பதை உணர்ந்தால், அதை ட்ரிம் மட்டும் செய்வேன், அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். நான் சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபட்டவன். நான் தனித்துவமானவன். என்னுடைய பயணத்தில் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், முக்கியமாக நான் மில்லியனில் ஒருவன் என்பதை, வாழ்வை விடாமல் இறுதிவரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். 

நான் வித்தியாசமாக இருக்கிறேன்; பெரும்பாலான நேரங்களில் நம்முடைய வேறுபாடுகள்தான் நம்முடைய மிகப்பெரிய பலம். நான் நானாக இருப்பதில் பெருமையாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

From around the web