ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!
குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தின் பலன்பூர் ஜகதன்கா பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ் சோலங்கி. இவரது மனைவி ரீட்டா. இந்த தம்பதிக்கு திஷா, காவ்யா மற்றும் குஷால் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சூரத்தின் அடாஜன் பகுதியில் உள்ள சித்தேஷ்வர் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் மணீஷ் சோலங்கியின் தந்தை கானு, தாய் ஷோபா ஆகியோரும் வசித்து வருகிறார்கள்.
மணீஷ் சோலாங்கி சூரத்தின் பலன்பூர் பகுதியில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்கள். கட்டில், பீரோ, கதவு, ஜன்னல், சோபா, சேர்கள் உள்பட பல்வேறு பர்னிச்சர்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவரிடம் 35 பேர் வேலை செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் இன்று காலை மணிஷ சோலாங்கிக்கு தொழிலாளர்கள் போனில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. வீட்டிற்கு அழைத்தால் அங்கும் யாருமே போனை எடுக்கவில்லை. இதையடுத்து வீட்டிற்கு போய் பார்த்துள்ளார்கள். வீட்டில் யாருமே கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், மணீஷின் வீட்டில் ஜன்னலை உடைத்து பார்த்த போது அவர்கள் அனைவரும் சடலமாக கிடந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சூரத் போலீசார் சம்பவம் நடந்த பலன்புர் அடாஜன் பகுதியில் உள்ள சித்தேஷ்வர் குடியிருப்பிற்கு விரைந்து வந்தனர். அங்கு பர்னிச்சர் வியாபாரி மணீஷ் சோலங்கியின் குடும்பத்தினர் அனைவரும் இறந்து கிடந்தனர். - திஷா, காவ்யா மற்றும் குஷால் என மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். மணீஷ் சோலங்கி மட்டும் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். அனைவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மணீஷ் சோலங்கி குடும்பத்துடன் இறந்தது குறித்து இதுவரை எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து மணீஷ் சோலங்கி எழுதிய கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அதில் கடன் தொல்லை காரணமாக இந்த துயர முடிவினை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று யார் பெயரையும் குறிப்பிடவில்லை. கடன் அதிக அளவில் வாங்கி தொழில் செய்த மணீஷ் சோலங்கி, நஷ்டம் அடைந்த நிலையில், பண நெருக்கடியில் தவித்து வந்துள்ளார். இதனால் உயிரிழந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.