ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன்.. மீட்புப் பணி தீவிரம்.. மத்திய பிரதேசத்தில் விபரீதம்!
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மனிகா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மயூர் (6). சிறுவன் மயூர் நேற்று மாலை, குழந்தைகளுடன் தனது வீட்டின் அருகே உள்ள வயல்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் தவறிவிழுந்தான். 70 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளான்.
இதுகுறித்து மற்ற சிறுவர்கள், மயூரின் பெற்றோரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ரேவா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறுகையில், “ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியில் இரண்டு பொக்லைன் இயந்திங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அரசு மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
#WATCH | Madhya Pradesh: Rescue of the 6-year-old child who fell in an open borewell, going on in Rewa. (12.04) pic.twitter.com/r4ylstwb5h
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 13, 2024
பனாரஸில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆழ் துளை கிணற்றில் குழந்தை எவ்வளவு ஆழத்தில் சிக்கியுள்ளது என்பதை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குழந்தையை பத்திரமாக மீட்டு விடுவோம்” என்றார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.