கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!!

 
Karnataka

கர்நாடகாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலசரிவில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கும். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு முதலில் மழை பெய்யவில்லை. அதன்பின்னர் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

Karnataka

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் சூல்யா, கடபா தாலுகாவின் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே முடங்கிவிட்டனர்.

குறிப்பாக, சுப்ரமணிய கிராமத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் ஸ்ருதி (11), ஞானஸ்ரீ (6) ஆகிய இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல உத்தர கன்னடா மாவட்டத்திலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள சவுதானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. அந்த வகையில் மாங்குளி, சௌதானி, முண்டள்ளி, முத்தள்ளி, முத்தா பட்கல் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Karnataka

இங்குள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடம் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இதில் முண்டள்ளி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மண்சரிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீட்டிற்குள் இருந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web