5 மாத பெண் குழந்தை கொலை செய்த சித்தி.. சொத்து பறிபோகும் என்பதால் 4 பிள்ளைகளின் தாய் வெறிச்செயல்!

 
Karnataka

கர்நாடகாவில் சொத்து பறிபோகும் என்பதால் கணவரின் முதல் மனைவியின் 5 மாத குழந்தையை, 4 பிள்ளைகளின் தாய் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகா பபலா கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது முதல் மனைவி பெயர் ஸ்ரீதேவி. 11 ஆண்டுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்திருந்தது. ஸ்ரீதேவியை திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. ஸ்ரீதேவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறி, கடந்த 7 ஆண்டுக்கு முன்பு தேவலம்மா என்பவரை சித்தப்பா 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இதுதொடர்பாக சித்தப்பாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சித்தப்பாவுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் ஸ்ரீதேவி பிரிந்து சென்று விட்டார். தன்னுடைய பெற்றோர் வீட்டில் அவர் வசித்து வந்தார். சித்தப்பா, தேவலம்மா தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்திருந்தது. 2 பேரும் பபலா கிராமத்தில் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

Baby

இதற்கிடையில், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சித்தப்பா மற்றும் ஸ்ரீதேவியை சமாதானப்படுத்தி, அவர்களது குடும்பத்தினர் மீண்டும் சேர்த்து வைத்திருந்தனர். இதையடுத்து ஒரே வீட்டில் சித்தப்பாவுடன் ஸ்ரீதேவி, தேவலம்மா, குழந்தைகள் வசித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு ஸ்ரீதேவி கர்ப்பம் அடைந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பாக்கியம் இல்லை என்று கணவரை பிரிந்து சென்ற ஸ்ரீதேவிக்கு குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியில் இருந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஸ்ரீதேவியின் 5 மாத குழந்தை திடீரென்று இறந்து விட்டது. குழந்தையின் வாயில் நுரை தள்ளி இருந்ததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து வடகேரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குழந்தைக்கு வழங்கப்பட்ட பாலில் விஷத்தை கலந்து கொடுத்ததால், பச்சிளம் குழந்தை இறந்தது தெரியவந்தது.

 Police

இதையடுத்து, வடகேரா போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது சித்தப்பாவின் 2-வது மனைவி தேவலம்மா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 5 மாத குழந்தையை கொலை செய்ததை தேவலம்மா ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், தனக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் இருப்பதாலும், தற்போது ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் கணவர் சித்தப்பாவின் சொத்தில் அந்த பெண் குழந்தைக்கு பங்கு கொடுக்க வேண்டும். இதனால் தனக்கும், தன்னுடைய குழந்தைகளுக்கான சொத்து பறிபோகும் என்பதால் 5 மாத குழந்தைக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்கு பின்பு தேவலம்மா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

From around the web