ஒரே வாரத்தில் 40 ஆயிரம் பேருக்கு பாதிப்பு.. கர்நாடகாவை அலறவிடும் பிங்க் ஐ நோய்..!

 
Pink Eye

கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பரவி வரும் கண் நோய் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித உடலில் கண் மிகவும் முக்கியமான பகுதி. எனவே அதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்நிலையில், இந்தியாவின் சில பகுதிகளில் கான்ஜுன்டிவிடிஸ் என்று அழைக்கப்படும் பிங்க் ஐ தொற்று (Pink eye infections) அதிகரித்து வருகிறது. இது பெரும்பாலும் மழை காலங்களில் ஏற்படும் வைரஸ் தொற்று ஆகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது.

இத்தகைய சூழலில் தான் தற்போது கர்நாடகாவில் Pink Eye எனும் கண்பாதிப்பு நோய் வேகமாக பரவி வருகிறது. பெங்களூர் உள்பட கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இந்த நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த மாதம் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி 10 நாளில் மட்டும் 40,477 பேர் பிங்க் ஐ எனும் கண்பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக பீதர் மாவட்டத்தில் 7,693 பேர், ராய்ச்சூரில் 6,493 பேர், சிவமொக்காவில் 3,411 பேர், விஜயநகரில் 2,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் 145 பேரும் பெங்களூர் புறநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் 192 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் வெளியிடப்பட்ட டேட்டாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pink Eye

தற்போதைய சூழலில் பெங்களூர், பெங்களூர் மாவட்டங்களை ஒப்பிடும்போது பிற மாவட்டங்களில் பிங்க் ஐ பாதிப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் பெங்களூரில் பாதிப்பை தடுப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த பாதிப்பை அடினோ வைரஸ்கள் ஏற்படுத்தும். ஆனால் தற்போது அடினோ வைரஸ் தவிர என்டீரோ வைரஸாலும் இந்த பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. பிங்க் ஐ எனும் கண்பாதிப்புக்கு சில அறிகுறிகள் உள்ளன. அதாவது தொடர்ந்து ஒன்று அல்லது 2 கண்களிலும் வலி ஏற்படுதல், கண்கள் சிவந்து இருத்தல், கண்களில் அரிப்பு ஏற்படுதல், கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுதல் உள்ளிட்டவை இதற்கான அறிகுறியாக உள்ளது.

இந்த அறிகுறிகள் இருப்பின் உடனடியாக கண்ணாடி அணிவதை நிறுத்த வேண்டும். இது 12 முதல் 24 மணிநேரத்தில் மாறிவிட்டால் பரவாயில்லை. மாறாக தொடர்ந்து நீடித்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவமனை சென்று மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும். மேலும் அழுக்கான கைகளை கொண்டு கண்களை தொடுவது, அழுக்கு துணியை கண்கள் துடைக்க பயன்படுத்துவது, பிங்க் ஐ பாதித்தவரின் கண்ணாடி, துணியை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

Drops

பொதுவாக கண் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் கோடையில் பரவும். ஆனால் பிங்க்- ஐ என்பது மழைக்காலத்தில் பரவுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்பது வளிமண்டலம், வெப்பநிலை, மழையில் ஏற்பட்ட மாற்றங்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூர் மிண்டோ மருத்துவமனையின் இயக்குனர் சுஜாதா ராதோடு கூறுகையில், “பொதுவாக கோடைக்காலத்தில் மெட்ராஸ் ஐ மற்றும் ரெட் ஐ பாதிப்புகள் இருக்கும். இதேபோல், குழந்தைகள் அடிக்கடி நீச்சல் குளங்களுக்குச் செல்வதால், கோடைக்காலத்தில் ப்ளீச் தொடர்பான ஆன்ஜுன்க்டிவிட்ஸ் பாதிப்பு பொதுவானது. மேலும் மாம்பழ சீசனில் சின்ன ஈக்கள் மூலம் வெண்படல அழற்சியும் கண்களில் ஏற்படும். ஆனால் பருவமழை மாதங்களில் தொற்று விகிதம் அதிகரிப்பது இதுவரை இல்லாத ஒன்றாகும். பெங்களூர் நகரில் தொடர்ந்து பிங்க் ஐ எனும் கண் பாதிப்பு நோய் அதிகரித்து வருகிறது. அலட்சியம் காட்டினால் இது தொற்று நோய் பரவல் போன்ற நிலையை ஏற்படுத்தும். கடந்த 2 வாரங்களில் 400 பேருக்கு பிங்க் ஐ கண் பாதிப்புக்கு சிகிச்சை அளித்துள்ளோம். தினமும் 30 பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றார்.

From around the web