300 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து.. 36 பேர் பலி.. ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து!

ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, தோடா மாவட்டத்தில் படோடே - கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறியது. இந்த பேருந்து துருங்கல் - அஸ்ஸார் அருகே 300 அடி கிடுகிடு பள்ளத்தில் பயணிகளுடன் கவிழ்ந்து உருண்டு பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 36 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சமும் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ50,000 நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் தமது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Jammu - Kashmir: 36 passengers dead, 6 in critical condition as bus plunges into gorge #JammuKashmir #BusAccident #Hitman #TaraSutaria #INDvsNZ #IndiaVsNewZealand pic.twitter.com/PyYJ9Ta5cP
— KIRAN'NTR' (@NTRcult4ever) November 15, 2023
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது எக்ஸ் பக்கத்தில், ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் 36 பேர் பலியான சம்பவம் பெரும் துயரைத் தருகிறது. பேருந்து விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.