ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம்.. 3 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமா.. 4 இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு!
ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றது. இதில், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3-ம் தேதியும் மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெற்றது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல், மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த தேர்தல்களில் ஒன்றிய அமைச்சர்கள் சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். அதில், ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் உட்பட 10 எம்.பி.க்கள் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனர். நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோர் மத்திய பிரதேச சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ரேணுகா சிங், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கியது. ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் பட்டேல், ரேணுகா சிங் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல், மத்திய பிரதேச எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக் ஆகியோரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து, 3 அமைச்சர்கள் வகித்து வந்த இலாகாக்கள், இணை அமைச்சர்கள் சிலருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண்டா வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராகவும், ஒன்றிய அமைச்சர் சுஸ்ரீ ஷோபா கரந்த்லாஜே உணவு பதப்படுத்துதல் தொழில்துறையின் இணை அமைச்சராகவும், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சராக ராஜீவ் சந்திரசேகரையும், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக டாக்டர் பார்தி பிரவின் பவாரையும் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.