சத்தீஸ்கரில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்புப்படையினர் அதிரடி.. அமித்ஷா வாழ்த்து

 
chhattisgarh

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் காண்கேர் மாவட்டத்தில் இன்று காலை முதல் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து எல்லை பாதுகாப்பு படையினரும், மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

CRF

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று மதியம் 2 மணியளவில் ஹபடொலா வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினர் பதிலடி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் உயிரிழந்து இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நக்சல் அமைப்பின் மூத்த கமாண்டரான சங்கர் சவ் தேரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தில் பாதுகாப்புப்படையை சேர்ந்த 3 வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக மண்டல காவல்துறை தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். நக்சல்கள் சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

From around the web