2.5 டன் தக்காளி லாரி கடத்தல்.. கொள்ளை அடித்த வேலூர் தம்பதி கைது.. பரபரப்பு வீடியோ!

 
Karnataka

கர்நாடகாவில் லாரியை கடத்திச் சென்று 2.5 டன் எடைக்கொண்ட தக்காளிகளை வேலூரைச் சேர்ந்த இளம் தம்பதி விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி மல்லேஷ் என்பவர் தான் விளைவித்த 2.5 டன் தக்காளியை கோலார் மாவட்டத்திற்கு விற்பனைக்கு எடுத்து வந்தார். சரக்கு வாகனம் ஒன்றில் அவர் தக்காளிகளை எடுத்து வந்தார். அவரும், சரக்கு வாகன டிரைவரும் பெங்களூரு எலகங்கா அருகே ஹெப்பால் சாலையில் வாகனத்தை டீ குடிப்பதற்காக நிறுத்தினர். பின்னர் வாகனத்தில் புறப்பட்டனர்.

ரிங்ரோடு பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது, தங்களது காரின் மீது லாரி மோதியதாக கூறி மர்மகும்பல் தக்காளி லோடு லாரியை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய நபர்கள், விவசாயி மல்லேஷ் மற்றும் டிரைவரை தாக்கி கீழே தள்ளினர். அதையடுத்து 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் அவர்கள் கடத்தி சென்றனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Karnataka

இதுகுறித்து மல்லேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். அப்போது போலீசார் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கர் (38) மற்றும் சிந்துஜா (36) தம்பதி என்பது தெரிந்தது. அவர்கள் தங்கள் கூட்டாளிகள் உதவியுடன் சம்பவத்தன்று தக்காளி பாரத்துடன் வந்த சரக்கு வாகனத்தை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அதை விற்பனை செய்வது குறித்து ஆலோசித்துள்ளனர்.

அதன்படி அவர்கள் சென்னைக்கு சென்று, அங்கு 2.5 டன் தக்காளியையும் விற்று ரூ.1.5 லட்சம் சம்பாதித்து உள்ளனர். மேலும் அந்த பணத்தை தம்பதி உள்பட 5 பேரும் பங்குபோட்டு கொண்டு மீண்டும் சரக்கு வாகனத்தை பெங்களூருவுக்கு எடுத்து வந்துள்ளனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, அவர்கள் சரக்கு வாகனத்தை தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தியது தெரிந்தது.


இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அங்கு நிறுத்தி இருந்த காலி சரக்கு வாகனத்தை மீட்டனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ. 120க்கும் மேல் விற்கப்படும் நிலையில், பயிரிடப்பட்ட தோட்டத்தில் இருந்து தக்காளியை கொள்ளையடித்து செல்லுதல், கடத்திச் சென்று விற்பனை செய்தல் போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதால் தக்காளி பயிரிட்டோர், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

From around the web