எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 ஊழியர்கள் பலி.. சிக்னல் கோளாறை சரிசெய்து கொண்டிருந்த போது விபரீதம்!
உத்தர பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் ஜகாங்கிரபாத் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாராபங்கி - கொண்டா இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறை ரயில்வே ஊழியர்கள் 3 பேர் நேற்று மாலை சரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, 2 தண்டவாளங்களிலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேகமாக வந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்க முயற்சித்தனர். அப்போது, 3 பேர் மீதும் கொச்சி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
இதில், 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் அரவிந்த் குமார் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எஞ்சிய 2 ஊழியர்களும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் சோரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.