18 மாத பெண் குழந்தை... தெரு நாய்கள் கடித்து குதறியதால் பலி... தலையில் அடித்து கதறிய தாய்!!
ஆந்திராவில் வெறும் 18 மாதங்களே ஆன குழந்தை ஒன்று எதிர்பாராத விதமாக நாய்கள் கடித்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மேட்டவலசா கிராமத்தில் 18 மாத குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது அங்கே இருந்த தெரு நாய்கள் சேர்ந்து அந்த குழந்தையைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.
இதில் அந்த குழந்தை படுகாயமடைந்த நிலையில், அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கே அந்த குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தது. இதில் உயிரிழந்த அந்த குழந்தை சாத்விகா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் குழந்தை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கே வந்து 5 தெருநாய்கள் திடீரென குழந்தையைக் கடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த குழந்தையின் உடலில் சுமார் 10க்கும் மேற்பட்ட நாய்க் கடி மார்க்குகள் இருந்துள்ளன.
நாய் கடித்ததால் மகள் அலறிய நிலையில், அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். இதையடுத்து விஜயநகரம் மாவட்டம் ராஜாமில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிறுமி அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.