கோவில்களுக்கு 18% ஜிஎஸ்டி.. கோடிகளில் நிலுவை! இந்துத் தலைவர்களுக்குத் தெரியுமா?

 
Banke Bihari temple

கடந்த 8 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி. மற்றும் அதற்கான அபராதம் என ஒவ்வொரு கோயிலுக்கும் பல லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

”கோயில்கள் மதம் தொடர்பானவை என்பதாலும் மக்களுக்கு சேவை செய்து வருவதாலும் அவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கோயில் வருமானத்தில் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

கோயில்களில் பிரசாதம், தரிசனக் கட்டணம், தங்கும் விடுதி போன்றவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை சேவையாக செய்து வருவதாக கோயில் நிர்வாகம் கூறிய போதிலும், மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது.

இந்நிலையில், 2017 முதல் இதுவரை எந்த வரியும் செலுத்தாததால் 8 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி மற்றும் அதற்கான அபராதம் என ஒவ்வொரு கோயிலுக்கும் பல லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமென்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பதை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திருத்தணியில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் சந்தைக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் இருப்பதை மாற்ற வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதைத் தவிர்க்கும் வகையில், இக்கோரிக்கையை பரிசீலிக்குமாறு கோரியிருந்தேன்” என்று அறிக்கை மூலம் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.

செல்வப் பெருந்தகையின் கோரிக்கை ஏற்கப்பட்டு திருத்தணி சந்தைக்கு காமராஜர் பெயர் தொடர்கிறது. 18 சதவீதம் கோவில்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுவது ஹெச்.ராஜா, அர்ஜுன்சம்பத் உள்ளிட்ட இந்துத் தலைவர்களுக்குத் தெரியுமா? ஒன்றிய அரசிடம்  பேசி வரியை நீக்குவார்களா?