13 வயது சிறுவன் மாரடைப்பால் பலி.. டிஜேக்கு நடனமாடிய போது நிகழ்ந்த சோகம்!
மத்திய பிரதேசத்தில் மிக சத்தமாக ஒலிக்கப்பட்ட டிஜே இசைக்கு நடனமாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 14-ம் தேதி இரவு 7.30 மணி அளவில், சமர் பில்லோர் என்ற சிறுவன் உள்ளூர் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு அருகாமையிலுள்ள ஒரு இடத்தில் டிஜே இசைக்கப்படுவதை அறிந்துள்ளார். உடனடியாக அங்கே சென்ற சிறுவன்... மக்கள் ஆரவாரத்தோடு இசைக்கு நடனமாடிக்கொண்டிருப்பதை கண்டு, தானும் கூட்டத்தில் சேர்ந்து உற்சாகமாக நடனமாட ஆரம்பித்துள்ளார்.
ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக நடனத்தின்போது சிறுவன் சமர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட சமரின் தாய் ஜமுனா தேசி உதவி கோரி கதறி அழுதுள்ளார். அங்கிருந்தவர்கள் உதவியோடு சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமரின் தாய் இது குறித்து தெரிவிக்கையில், “சமருக்கு இதய நோய் இருந்தது. ஆனால், சமர் அன்றைய தினம் நன்றாகவே இருந்தார்” என்றுள்ளார். தந்தை கைலாஷ் பில்லோர் தெரிவிக்கையில், “டிஜேவின் சத்தம் மிக அதிகமாக ஆபத்தான சத்தமாக இருந்தது. எத்தனையோ முறை எச்சரித்தும் டிஜே நடத்துபவர்கள் சத்தத்தை குறைக்கவில்லை. எங்கள் மகனின் உயிர்போன பிறகும், அந்த சத்தத்தை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதுதான் இன்னும் துயரம்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதிலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், புகார் அளிப்பதற்காக, டிஜேவை அதிக சத்தத்தோடு இசைத்த வேன் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொடுக்குமாறு சிறுவனின் பெற்றோர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த அக்கம்பக்கத்து வீட்டாரிடம் கேட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றியும் 8 நபர்களின் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும், சிறுவன் இறந்து மூன்று நாட்கள் ஆகியும் ஒருவர் கூட அந்த சிசிடிவி காட்சிகளை கொடுக்க முன்வரவில்லை.