12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை!! பட்ஜெட்டில் மாநில அரசு அதிரடி!
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் நேற்று 2023-24 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். சத்தீஸ்கர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், பாகேல் அரசாங்கத்தின் கடைசி மாநில பட்ஜெட் இதுவாகும்.
2023-24-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். பட்ஜெட்டில் இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று, அங்கன்வாடி பணியாளர்கள், வீட்டுக் காவலர்கள், கிராம கோட்வார்கள் மற்றும் பிறரின் மாதாந்திர கௌரவ ஊதியத்தையும் உயர்த்துவதாக அறிவித்தார். அதன்படி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் மாதாந்திர கௌரவ ஊதியம் முறையே ரூ.6,500-ல் இருந்து ரூ.10,000 ஆகவும், ரூ.3,250-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்படும்.
அதேபோல், மினி அங்கன்வாடி பணியாளர்களுக்கு, தற்போது வழங்கப்படும், 4,500 ரூபாய்க்கு பதிலாக, 7,500 ரூபாய் வழங்கப்படும் என்றார். கோட்வாரா கிராம மக்களுக்கு அவர்கள் பணியாற்றும் பகுதியின் அளவைப் பொறுத்து வழங்கப்படும் கவுரவ ஊதியத்தையும் முதல்வர் அறிவித்தார்.
ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு மருத்துவமனையில் 700 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவமனை கட்டிடத்தை மேம்படுத்த ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் நடமாடும் மருத்துவப் பிரிவு நிறுவுவதற்காக, ரூ5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.