கர்நாடகாவில் 120 அடி உயர தேர் சாய்ந்து விழுந்து விபத்து.. அதிர்ச்சி வீடியோ!
கர்நாடகாவில் 120 தேர் கவிழுந்து விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா உஸ்கூரில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மத்தூரம்மா கோவில் உள்ளது. இக்கோவிலை ராஜேந்திர சோழன் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் உஸ்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தேர்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் அந்தந்த கிராம தேவதைகள் மத்தூரம்மா தரிசனத்துக்காக இழுத்து வருவது வழக்கம்.
இதற்காக ஒவ்வொரு கிராமத்தினரும் போட்டி போட்டு கொண்டு தேரை அமைத்து உஸ்கூருக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் இழுத்துக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு தேரும் 20 ஜோடி காளைகள், 5 டிராக்டர்கள், 5 பொக்லைன் எந்திரங்கள், பக்தர்கள் மூலம் இழுத்து வரப்படும். இதேபோல், உஸ்கூர் கிராமத்தில் மத்தூரம்மா கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.
இதனால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் மத்தூரம்மா கோவிலுக்கு 7 தேர்களை அலங்கரித்து இழுத்து வந்தனர். 7 தேர்களை 150 காளை மாடுகள், 40 பொக்லைன் எந்திரங்கள், 50 டிராக்டர்கள் இழுத்து வந்தன. ஒவ்வொரு தேரும் சுமார் 120 அடி முதல் 130 அடி உயரம் கொண்டதாக இருந்தன.
இந்த நிலையில் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஜோடிக்கப்பட்டு உஸ்கூர் திருவிழாவுக்கு டிராக்டர் மற்றும் மாடுகள் மூலம் இழுத்து செல்லப்பட்ட ஒரு தேர் ஹீலலிகே அருகே கம்மசந்திரா பகுதியில் ஒரு வளைவில் திருப்பியபோது, அந்த தேர் ஒரு பக்கமாக சரிய தொடங்கியது. அதனை கண்டுகொள்ளாமல் பக்தர்கள் தொடர்ந்து தேரை இழுத்து சென்றனர்.
VIDEO | A 120-foot-tall temple chariot collapsed at Anekal town near Bengaluru earlier today, during the annual chariot fair of Huskur Madduramma Temple. pic.twitter.com/qbCda7JYVI
— Press Trust of India (@PTI_News) April 6, 2024
அப்போது திடீரென்று தேர் சாய்ந்து கண் இமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தது. தேர் முழுமையாக கீழே விழுந்ததும் அப்பகுதியே புழுதி மேலே எழும்பி பறந்தது. தேர் சாய்வதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பெண்கள், குழந்தைகள், பாதுகாப்புக்கு வந்த போலீசார் என பலர் கத்தி கூச்சலிட்டபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாரும் தேரின் அடியில் சிக்கவில்லை. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தேர் சாய்வதை பார்த்து அங்கிருந்து ஓடிய சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
தேர் திருவிழாவை அங்கிருந்த பலர் தங்கள் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். அப்போது தேர் சாய்ந்து விழுவதையும் அவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டும் நடந்த தேரோட்டத்தின் போதும் இதேபோன்று பக்தர்கள் இழுத்து வந்த தேர் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகி இருந்தது. தற்போது மீண்டும் தேர் சாய்ந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.